Tuesday, May 23, 2006

தாவணிக்கனவுகள்
ரொம்ப காலத்துக்கு மிந்தி தாவணி தாவணின்னு ஒரு ட்ரெஸ் இருந்துச்சாம். அதுக்கு ஒருகாலத்துலே பசங்க மத்தியிலே ஒரே கிராக்கியாம். பாக்கரவனெல்லாம் அந்த மஞ்சக்கலர் தாவணி இந்த சிகப்பு கலர் தாவணின்னு மாஞ்சு மாஞ்சு உருகி வழியரதைப் பார்த்து அதுக்கு தலை மேல கர்வம் வந்து டாண்டியா ஆடுச்சாம். என்னடா இவனுக நாம ஏதோ நாலுக்கு ரெண்டு சைஸ்ல இருக்கோம் நம்மளைப் பார்த்து இந்தப் பய புள்ளைக இம்புட்டு வழி வழியுரானுகளேன்னு அதுக்கு ஒரே சிரிப்பு !!

அதுவும் இந்த திருவிழா அது இதுன்னு வந்துடாப் போதும் இந்த தாவணிக்கு பெருமை சலங்கையக் கட்டிகிட்டு ஆடும். சும்மா சும்மா மாராப்ப புடிச்சி இழுத்து விடுரதும் ஆனா ஊனா முனைய வாயிலே வச்சி கடிச்சிக்கரதும் என்ன சொல்ல? இதையப் பார்த்து தாவணிக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு . உடனே கடவுள்ட்ட போயி ஒரு கம்ளெயிண்ட் பண்ணுச்சாம்.

‘கடவுளே கடவுளே இந்த பய புள்ளைக என்னைய ரொம்பத்தான் படுத்தரானுக. என்னைய கட்டிகிட்டு இருக்கற இந்த பொட்டப்புள்ளைக கையி கால வச்சுகிட்டு என்னைய படுத்தர பாடு இருக்கே?? கொஞ்சம் நேரங்கூட சும்மா இருக்க விடாமா கைய வச்சி இழுத்து இழுத்து விடுரதும் முனையப் பிடிச்சி வாயில வச்சிக்கறதும அய்யோ அய்ய்யோ. இந்த ஆம்பளப் பசங்களாவது பரவாயில்லை. எங்களைப் பார்த்தவுடனே சும்மா கேஸ் ஏத்துன பலூன் கணக்கா பறக்க ஆரம்பிச்சுடுவானுக.இதுகளுக்கு மத்தியிலே நாம் கெடந்து அல்லல் படரேன் எனக்கு ஏதச்சும் பண்ணு கடவுளேன்னு!! ’ ஒரே பூத்து பூத்துன்னு ஒப்பாரி வச்சுதாம்.

கடவுளு சொன்னாரு ‘ நீயில்லையின்னா இந்த பசங்க ரொம்பத்தான் தவிச்சிப் போயிருவானுகளே. அப்புறம் அவனுக வேற என்கிட்ட வந்து ஒப்பாரி வச்சா என்ன பண்ணுவேன்? எனக்கே உன்னைய கட்டிப்பார்த்தா ஒரு ‘கிக்’குதான். கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோன்னு’ கெஞ்சுனாராம்.

ஆனா தாவணி என்ன சாதாரணப்பட்ட ஆளா? அது இத்தனை வருசமா அதோடா எஜமானியம்மாகிட்டே எப்படியெல்லாம் பிடிவாதம் பிடிச்சா காரியம் ஆகும்னு கத்துகிட்டுல்ல வந்துருக்கு. தாவணி அழுகரதைப் பார்த்தா யருக்குத்தான் மனுசு இளகாது? பக்கத்துக்கு ஒண்ணுன்னு இருக்கர கடவுள் மட்டும் விதிவிலக்கா என்ன?
‘ சரி எப்படியோ போ. இனிமே இந்த பொட்டப்புள்ளைக உன்னைய மறக்க மாதிரி பண்ணிடரேன் ஓகேவா ? ‘ அப்படீன்னு சொல்லவும் அதையகேட்ட தாவணி அப்படியே துள்ளி குதிச்ச்சிச்சாம். அதுலே இருந்து கடவுளு பொம்பளை புள்ளைக மனசிலே இந்த தாவணி அப்படீன்னா என்னான்னு கேக்கர மாதிரி பண்ணிட்டாராம்.

- ஜொள்ளணாற்றுப் படை (அதிகாரம் - 2 பாகம் - தாவணி கலைத்த தவம் )


சிறுகுறிப்பு :-

தாவணி - இருபதாம் நூற்றாண்டில் 1980 ன் இறுதியில் பொது வாழ்விலிருந்து முற்றிலும் விலகி விட்ட இந்த உடை கால் சென்டர்கள் வருவதற்கு முன் பல இளைஞர்களின் உறக்கத்தை மானாவாரியாக தொலைப்பதற்கு காரணமாக இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இதனை அவ்வப்போது உபயோகப்படுத்தும் ஒரே துறை தமிழகத்திலுள்ள திரைப்படத்துறை. 80 களில் வந்த திரைப்படங்களில் இவை அநேகமாக பல கற்பழிப்பு காட்சிகளில் உருவப்படுவதற்கும் மற்றும் கதாநாயகர்கள் தற்போது இருப்பது போல கூகுள் இல்லாததால் பரம் பொருளை இதனடியில் தேடுவதற்கும் பயன் பட்டதாக பார்க்கும் திரைப்படங்கள் வாயிலாக அறிகிறோம்.

Saturday, May 13, 2006

'தல' யுடன் ஒருநாள் - வ வா சா வின் பதிலடி !!


சமீபத்தில் முளைத்த காளான் தன்னை பார்த்திபன் என்று கூறிக்கொள்ளும் Freelance கோயபல்ஸ் பார்த்திபன் எங்கள் அண்ணன் தங்கக்கிண்ணம் ‘தல’ தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் எனவும் எங்கள் சங்கத்தினர் பதவிக்கு ஆசைப்பட்டு அவரைக் கடத்தி பதுக்கி வைத்துள்ளதாகவும் மேலும் அவரை மேலேயே அனுப்பிவிட்டதாகவும் புறம் பேசித்திரியும் கூடத்தினருக்கு சவுக்கடி கொடுக்கவும் மண்வாரித் தூற்றுபவர்களுக்கு அவர்கள் நாவை தரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கினங்க அண்ணன் ‘தல’ யுடன் ஒருநாள் நடவடிக்கைகளை கூடேயே இருந்து பார்த்து அவர்தம் புகழை தரணியறியச்செய்திட வேண்டி சங்கத்தொண்டன் உங்கள் பாசமலர் ஜொள்ளுப்பாண்டி தன் டிஜிடல் கேமராவுடன் ராவோடு ராவாகக் ( I Mean Night ok? ) கிளம்பிச்சென்று வெற்றியுடன் வந்திருக்கின்றேன். (யப்பா மூச்சு முட்டுது யாராச்சும் சோடா குடுங்கப்பா !)

‘தல’ யின் ஒருநாள் நடவடிக்கைகளை கூடே இருந்து அறியும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? இதோ ‘தல’ யின் தலபுராணம் அறிய அலைகடலென வாரீர் வாரீர்.
காலை மணி 10:00 : அதிகாலையிலேயே எழுந்துவிடும் ‘தல’ மங்களகரமாக ‘ஃபுல் சூட்டில் நம்முன் ஆஜராகிரார்.


காலை மணி 10:30 : ‘ காலையில் தினமும் கண்விழித்தாலே கைதொழும் தெய்வம் அம்மா !! “ பாடிக்கொண்டே தர்பாருக்குமுன் கிளம்பும் முன் தன் தாயிடன் ஆசிவாங்கிக்கொண்டு நமக்கு கொடுத்த போஸ் !!

காலை மணி 11 : தாயிடம் ஆசி வாங்கினால் நாளெல்லாம் வெற்றி நமதே எனக்காட்டுகிறார் ‘தல’.


நண்பகல் மணி 12 : ஒருகையில் சோமபானம் நிறைந்த சொம்பு மறுகையில் ‘கேர்’ராக இருந்தால் முகர்ந்து பார்த்துக்கொள்ள லெமன்னுடன் ஒய்யாரமாக தர்பாரில் ‘தல’ அமர்ந்திருக்கு அற்புதக்காட்சி !!

பிற்பகல் மணி 4:00 : “சாப்ட்வேர் பீச் அமைப்பதைப் பற்றி துரைமார்களுடன் ஆலோசனையில் ‘தல’ ( தல யின் முன் துரைமார்கள் பவ்யமாக நிற்பதைப்பாரீர் !!)
இரவு மணி 8 : ‘ தல’ யின் அந்தப்புரக்காட்சிகளை அவருக்கே தெரியாமல் நம் கேமரா எடுத்த சில பல காட்சிகள்.இதப் பார்த்தபின்னாவது பார்த்திபன் போன்ற புல்லுறுவிகள் அடங்குவார்களாக!

Wednesday, May 03, 2006

ஸ்ரீல ஸ்ரீ ஜொள்ளானந்தா ஸ்வாமிகளின் கும்தலக்கா பேட்டி !!!!


பமக தன் கொள்கையை ( ?! ) பரப்ப எங்கோ ஒடக்காண்கள் ( lizard ) மேயும் விராலிமலை குகையில் ஒளிந்திருந்த குஜிலியானந்தாவை தரதரவெனெ வெளியே இழுத்து வழுக்கட்டாயமாகப் பேட்டியெடுத்து வெளியிட்டதால் வ.வா.ச வும் ஏதேனும் ஒரு சாமியாரை பேட்டியெடுத்து தன் கொள்கையை பரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கொள்கையைப் பரப்ப ஏதேனும் சாமியார்கள் கிடைப்பார்களா எனத் தேட சங்க ‘தல’ கைப்புவும் தளபதி ‘தேவ்’வும் இமயமலைப்பக்கம் சென்றுள்ளதால் தற்காலிக ஏற்பாடாக லோக்கலாக மீனம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலைச் சாரலில் சமுதாயப்பணியாற்றும் ஸ்வாமி ஜொள்ளானந்தா பேட்டி தர சம்மதித்து நம்மை வரச்சொன்னார். தல கைப்புவும் தேவும் குகை குகையாக சடாமுடி சாமியார்களைத் தேடி பிடித்து வருவதற்குள் தேர்தல் முடிந்துவிடுமென்பதாலும் ஸ்வாமி ஜொள்ளானந்தா அடிக்கடி ஜொள்ளுப்பேட்டை பக்கம் வந்து அருள்பாலித்து வருவதாலும் இவரைவிட்டால் இப்போதைக்கு பமக விற்கு பதிலடி கொடுக்க வேறு சாமியார்கள் கிடைக்கமாட்டார்கள் எனற ரகசியகாரணங்கள் இருப்பதாலும் ஸ்வாமி அவர்களை குஷிப்படுத்த வாங்கிச் சென்ற குவாட்டரைக் கண்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியவாரே கொடுத்த பேட்டி !!

நாம் : ஸ்வாமி எங்கே சென்று விட்டீர்கள் இத்தனை காலம் ?

ஜொ.ஸ்வாமி : நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! மக்கட்பணி மகேசன் பணி. அதனை எப்படி ஆற்றுவது என நாம் நம் பக்தைகளுடன் கொடைக்கானல் மலையிலே கோடைஸ் இன்டர் நேஷனல் ஓட்டலில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தோம்! நம நம கம கம குவாட்டர் குமகும !!

நாம் : ஸ்வாமி தங்களின் பூர்வாசிரமம் பற்றி...?

ஜொ.ஸ்வாமி : கோட்டையாம் கோயிலாம் கோமணனத்து ஆண்டியாம் தேடினோம் ஓடினோம் தோராபோரா மலை வரை இருந்தும் மட்டில்லை ! போலீஸு ரெய்டிலே மாட்டினோம் ஏற்றினோம் ஏறாத கோர்ட்டில்லே !! விடவில்லை என் அப்பன் அங்கமுத்து பண்டிதன் வாங்கினோம் தாங்கினோம் வாங்காத ஆப்பில்லே !!! அவனே கூறினான் ( மேலே கை காட்டுகிறார் ) சாமியார் ஆகினோம் ! நம நம கம கம குவாட்டர் கும கும !!

நாம் : ஸ்வாமி பமக பற்றி குஜிலியானந்தா ஏதோ சொல்கிறாரே ?

ஜொ.ஸ்வாமி : பற்றற்று இருக்க வேண்டிய சாமியாராம் பற்றுகொண்டு பமக பற்றிக் கூறுகிறாராம். மூடவேண்டிதை மூடாமல் மூடவேண்டாததை மூடிக்கொண்டலையும் கோமகனாம் கோமேதகத் தலைவனாம் பமக பலப்பமாம் !!! கண்ணனே ஆக்கினான் கண்ணணே கொலை செய்தான்!! யாரும் தேவையில்லை அவர்கட்கு அவரொருவர் போதுமே.தேர்தலில் பமகவிமற்கு மக்கள் பாடைகட்டுவது என் ஞான திருஷ்டியில் தெரிகிறது! நம நம கம கம குவாட்டர் குமகும !! ( உடனே பக்தைகள் ஸ்வாமிகளுக்கு ஆரத்தி எடுக்கிறனர் )

ஸ்வாமிகள் நாம் வாங்கி சென்றிருந்த குவாட்டரில் பாதியை கொஞ்சமாகக் கவிழ்த்துக்கொள்ளுகிறார். மீதியை கமண்டலத்தில் சரித்துக்கொள்கிறார்.

நாம் : ஸ்வாமி பமக விற்கு நூற்றுக்கணக்காக பிண்ணூட்ட வாக்குகள் வருவதாக் கூறுவது பற்றி ???

ஜொ.ஸ்வாமி : மகாபாரதத்திலே கவ்ரவர்கள் எத்தினி பேர் ? ( ஸ்வாமிக்கு லேசாக மப்பு தட்டுகிறது போலும் ) 100 பேர். ஆனா பாண்டவர்கள் எத்தனை பேர் ? Just அஞ்சே பேர் !! என்ணிக்கை முக்கியமில்லை ! யுத்தத்திலே யாரை பகவான் ஜெயிக்க வச்சான் ? புரிஞ்சுதா? 100 பேர் 1000 பேர் பூச்சாண்டிக்கு பயப்பட வேண்டாம் ! அப்படியே பயம் வந்தா இருக்கவே இருக்கு ஸ்லோகம் முடியரப்போ உனக்கு சொல்லித்தாரேன். ( நம் மீது எதையோ தூவுகிறார் பக்தைகள் கண்ணத்தில் போட்டுக்கொண்டு குலவை ஒலி எழுப்புகிறார்கள் ) நம நம கம கம குவாட்டர் குமகும !!

நாம் : ஸ்வாமி வ வா ச வோட எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஜொ.ஸ்வாமி : காலமே உங்களிடம் சொல்லும் !! எத்தனி ஆப்பு வரினும் வாழையாடி வழையாக வளரும் வாழைபோலே ! குவாட்டர் மீது குவாட்டர் அடித்தாலும் கவிழாத ஜொள்ளானந்தா போலே ! நாக்குதள்ள சாப்ட்வேர் கண்டுபிடித்தாலும் பின்னூட்டமே வாராமல் போனாலும் தளராமல் ஜல்லியடிக்கும் பினாத்தலார் போலே அது வளந்துகொண்டேதான் இருக்கும். நம நம கம கம குவாட்டர் குமகும !!
( கமண்டலத்தையும் சரித்துக்கொள்கிறார் )

நாம் : ஸ்வாமி பயப்படாமல் இருக்க ஏதோ ஸ்லோகம் சொல்லுவதாக கூறினீர்களே?

ஜொ.ஸ்வாமி : அதுவா சிஷ்யா வேறென்ன ? நம நம கம கம குவாட்டர் குமகும !!

சொல்லிக்கொண்டே ஸ்வாமிகள் பக்தையின் மடியில் சாய்கிறார். ஸ்வாமி மலையேறிவிடதாக பக்தைகள் கூற நடையைக் கட்டினோம் !!!