Friday, August 18, 2006

ஞாண் tolet போர்டு கண்டு...

Tolet போர்டு கண்டு
நம்மூரு பஸ்டாண்டுல பஸ்சுக்கு நின்னுகிட்டு இருக்கீங்க. ரொம்ப நேரமா பஸ்சு வராத வெறுப்பிலே நின்னுகிட்டு இருக்குறப்போ ‘கும்சிக்’குன்னு ஒரு பஸ்சு ஆடி அசைஞ்சு வருது. அப்பாடா வந்துருச்சு நிம்மதியா போய் சீட்டுல செட்டில் ஆகலாம்னு ஆசை ஆசையாய் பஸ்சுக்குள்ளார ஏறிப்போறீங்க ! உங்களுக்கு பயங்கர ஷாக் !! என்ன?? எல்லா சீட்டுலயும் ஒரு துண்டோ இல்ல ‘பேக்’கோ போட்டுருக்கு. அடப்பாவிகளா! அதுக்குள்ளாரயும் துண்டு போட்டு சீட்டைப் புடிச்சிட்டீங்களாடான்னு பொலம்பிகிட்டே இறங்கிடுறீங்க ! சரி போனது போகட்டும் அடுத்த பஸ்ஸிலயாவது சூதனாமா இருந்து சீட்டப் புடிப்போன்னு உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிகிட்டு நிக்கிறீங்க !

அடுத்த பஸ்ஸும் வருது .ஆனா அதுலயும் நீங்க சீட்டப் புடிக்க முடியாம ‘பேக்கு’ மாதிரி நிக்குறீங்க. உங்க கண்ணுக்கு முன்னாடியே அவனவன் பாய்ஞ்சு ஜன்னல் வழியா சீட்டைப் போட்டுட்டு ‘என்னாடா புண்ணாக்கு!’ ன்னு உங்களை ஒரு பார்வை வேற பாக்குறானுவ ! என்ன கொடுமையடா இதுன்னு நீங்க ‘தேமே’ன்னு நிக்கிறீங்க. இப்படியே போய்கிட்டு இருந்தா என்னதான் பண்ணுரது ?? என்னடா பாண்டிப்பயலுக்கு என்ன ஆச்சுன்னு பாக்குறீயளா? அது வேற ஒண்ணும் இல்லீங்க. போன வாரம் ப்ரெண்டு ஒருத்தனைப் பார்த்தேன். பய இப்போ கொஞ்சநாளா சாப்ட்வேர்ல வேலை பார்த்துகிட்டு இருக்கான். நம்மளோட ரொம்ப தோஸ்துங்க.

பய அப்படியே நம்மள மாதிரிதான். ‘என்னடா இப்போல்லாம் phone னே பண்றதில்ல! என்ன ஏதாசும் பொண்ணுகூட செட்டில் ஆகிட்டயா’ ன்னு கேட்டதுதான் . பய ரொம்ப பீலிங்ஸ் ஆய்ட்டான். என்னடா ஏதாசும் தப்பா பேசிட்டனான்னு பதறிப்போய் கேட்டா சொல்றான் “ எங்கடா பாண்டி நானும் ஒவ்வொரு தடவையும் ஏதாச்சும் பொண்ணுங்க வரும் அப்படியே பேசி செட்டில் ஆகிடலாம்னு பார்த்தா ஆவனவன் கம்பெனி வாசல்லயே துண்டோட நின்னு வாசல்லயே மடக்கீடுறானுவ ! என்ன பண்ரது? சரி அடுத்த தடவை வர்றதையாவது மடக்கிடலாம்னு நானும் கையிலே ஒரு துண்டெடுத்துகிட்டு போனா அங்கன பார்த்தா அவனவன் பெரிய ஜமுக்காளத்தையே வச்சிகிட்டு நிக்குறானுவ!! சரி நாமளும் கோதாவிலே இறங்கிடனும் உடக்கூடாதுன்னு நானும் ஒரு ஜமுக்காளத்தை எடுத்துகிட்டு போனா அவனவன் பெரிய தார்ப்பாயையே வச்சுகிட்டு நிக்குறானுவ. இதுலே நமகெங்க இடம் கெடைக்கப் போவுது !! “ ன்னு ரொம்ப சோகமா சொல்லிகிட்டு இருந்தான்.

அடடா இதென்னடா இப்படியொரு சோதனை. இப்படித்தாங்க காலேஜில இருந்து இந்தப் பொண்ணுங்க கூட ஒரே பிரச்சனை. ஏதாச்சும் பாக்குற மாதிரி ஒரு பொண்ணு வந்துடக் கூடாது. உடனே எங்க இருந்துதான் வருவானுகளோ? ஒடனே வந்து பட்டா போட்டு சுத்தியும் வேலிய போட்டுருவானுங்க ! இல்லையின்னா அதுக காலேஜுக்குள்ள நுழையுறப்போவே ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டாத்தான் வரும். எவண்டாவன் அதுகுள்ளா ரிசர்வ் பண்ணுனதுன்னு கேட்டா அது ஸ்கூலுல இருந்தேன்னு பதில் வரும். நாம ஒரு ஓரமா RAC ( Reservation against cancellation) டிக்கெட்டோட நிக்க வேண்டியதுத்தான்.

ஆனா சிலபேரு இருப்பானுகங்க ! அந்தப்பொண்ணோட ஏதாச்ச்சும் ஒரேயொரு தகவல் தெரியும். உதாரணதுக்கு அதுக்கு தெலுங்கு தெரியும் அப்படீங்கர ஒரேயொரு ஜல்லி கல்லு கெடைச்சா போதுமே. சும்மா ஜல்லிய கொட்டி தாரைப் போட்டு ஒரு பெரிய காதல் Highwayயே போட்டுருவாணுங்க ! “அம்மாயி சாயிபாபா கோயில் சூஸ்தாரா ? “ ன்னு அரையும் கொறையுமா தெலுங்கு பேசி அப்படியே திருப்பதிக்கு அப்பீட் ஆயிருவானுங்க !

பேசாமா இந்த பொண்னுங்க மனசுக்கு ஒரு TOLET ன்னு போர்டு மாட்டிகிட்டா எவ்ளோ சவுகரியமா இருக்கும்?! “ஞான் Tolet போர்டு கண்டு! இவ்விட நிங்கள் மனசு கிட்டுமோ?! “ன்னு பல பாஷை பேசிகிட்டே அவங்க மனசுகுள்ள செட்டில் ஆகிடலாம் பாருங்க ! கொஞ்சம் ரோசணை பண்ணிப்பாருங்க அம்மணிகளா !!

Saturday, August 12, 2006

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு


“ இந்த ரெண்டு வருசத்துலே ஒரு ரெண்டாயிரம் டீயாவது இந்த கடையில குடிச்சிருக்கமாட்டே? “ ஆனந்த் என்னைப் பார்த்து நக்கலாக கேட்டான்.

“ டேய் அவ்ளோலாம் இருக்காதுடா ! ஏண்டா என்னை இப்படி ஓட்டுறீங்க? “ பரிதாபமாகக் கேட்டேன்.

“தினமும் சூரியன் வருதோ இல்லையோ நீ காலைல 7 மணிக்கே
‘டாண்’ ணு இந்த கடைக்கு டீ குடிக்க வந்துடறே இல்லை ? அதான் பாக்கிறோமே! “ கோபி வேறு ஒத்து ஊதினான்.

“ பாருங்க நீங்க இந்த கடையில டீ குடிக்க ஆரம்பிச்சப்போ எவ்ளோ பரிதாபமாக இருந்தது ! இப்போ பார்த்தா பெங்களூர் PUB ரேஞ்சுக்கு டெவலப் பண்ணிட்டான். இதுல பாதியாவது உங்க காசுலதான் வாங்கினதா இருக்கும் ! “ அருண் வேறு தன் பங்குக்கு வெறுப்பேற்றினார்.

நாங்கள் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் தங்கியிருந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன், முந்தைய நாள் இரவு ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட்ட எதோ தன் வேலையைக் காட்டியதால் சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியதாயிற்று. ரொம்ப சீக்கிரமே எழுந்துட்டமோ ? என நேரம் பார்க்க காலை 7 எனக்காட்டியது. எனது ரூம்மேட்டுகள் இரண்டாம் சாமத்தில் இருந்தனர். மீண்டும் தூக்கம் வராததால் சரி போய் ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று தெருமுனையில் இருக்கும் டீக்கடைக்கு வந்தேன்.

அது ஒரு டிசம்பர் மாதமானதால் குளிர் இன்னும் மிச்சமிருந்தது. கடைக்கு வெளியில் நின்று இரண்டு ‘ சிப் ‘ டீயை உள்ளே தள்ளியபோதுதான் எதிர்புறம் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் பள்ளிக்குச் செல்லக் காத்திருக்கும் அவளைப் பார்த்தேன். ஒருவினாடி டீயை என் சட்டையில் சிதறிவிட்டேன். என் மனதையும் தான்.

அழகான கண்கள் , அகலமான கண்கள், சேல்விழி,வேல்விழி , என் விழியில் எல்லாமே தெரிந்தது. பஸ் வாராத வெறுப்பில் அவள் முகம் சுழித்தபோது அந்த சுழிப்புச் சுழலில் சிக்கி அமிழ்ந்து போனேன். ஒருவழியாக அவள் பஸ் ஏறி சென்றபோது நான் இரண்டு கோப்பை தேநீரை முடித்திருந்தேன். அது இரண்டாயிரம் கோப்பையாகும் என நினைக்கவேயில்லை.

பின்வந்த நாட்களில் அதிகாலை 6 மணிக்கே அலாரம் வைத்து எழுந்தேன். பின்னே அப்படியே லுங்கிலயா போய் என் தேவதையப் பார்ப்பது ? 6.45 க்கெல்லாம் குளித்து அரிதாரம் பூசி ரெடியாகி டீக்கடையில் ஆஜராக ஆரம்பித்தேன். டீயையும் அவளையும் சேர்த்து பருகத்தொடங்கினேன். டீக்கடையே என் போதிமரமானது.

இப்படியே எவ்ளோ நாள்தான் கடத்துவது.அவள் பேர் என்னான்னு கண்டுபிடிக்கணுமே ! ரூம் மேட்களிடம் கேட்கலாமா ? அவ்ளோதான்! வேற வெனையே வேண்டாம். கெடைச்சாண்டா ஒரு சின்னத்தம்பி என நம்மை கோமாளி ஆக்கி கபடி ஆடிவிடுவார்கள் ! சமயத்தில் அவர்களே ஹீரோ ஆகிவிட்டால் ?! இந்த மாதிரி மேட்டரையெல்லாம் அடக்கி வாசிக்கனும் பாஸ் .முதல்ல ‘ pitch ’ சை ரெடி பண்ணலாம் . எவன அனுப்பி ரிபோர்ட் வாங்கறது என யோசித்தபோதுதான் உடனே எனக்கு எங்கள் மேன்சனில் வேலை செய்யும் செல்வம் ஞாபகத்தில் வந்தான். பக்குவமாக எடுத்துச்சொல்லி அனுமானாக அனுப்பி வைத்தேன். அடுத்த நாளே வந்தான்.

“ அண்ணே ! அவ பேரு மஞ்சு. +2 படிக்கிறா.” காதுக்குள் கிசுகிசுத்தான்.
“ செல்வம் கண்ணா இது போதுண்டா ! “ ரகசியம் காக்க அவனுக்கு வெகுமதி அளித்தேன். “ அண்ணே வேறே டீடெய்ல் வேணும்னா கேளுங்க. முடிச்சரலாம் “
5 ரூபாய்க்கே 50 ரூபாய் வேலையை செய்யத் துடித்தான். அவனை ஆசுவாசப்படுத்தி அனுப்பினேன்.

அடுத்த நாளிலிருந்து மஞ்சுவின் கவனத்தை கவர என்ன செய்யலாம் என யோசித்த போது கிடைத்த ஐடியாதான் ‘ Jogging “ செல்வது. என் ரூம் மேட்களுக்கும் சந்தேகம் வராது.தினமும் காலையில் 5:30 முதல் 6:30 வரை மெரீனாவில் ஓடிவிட்டு அப்படியே டீக்கடையில் ஐக்கியமாக ஆரம்பித்தேன். ( அத்தனை பேரும் தூங்கி வழியும் முகத்தோடு இருக்க நான் மட்டும் தனித்து தெரியமாட்டேன் ? ) மஞ்சு நடந்து வரும் வழியில் இருக்கும் போன் பூத்தில் நண்பர்களுக்கு போன் பேசினேன். எவண்டா இவன் காலங்காத்தால தேவையில்லாம போனப்போட்டு எழுப்பி உயிரவாங்கறானே என அவனவன் மண்டை காய்ந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். இப்படியாக சில பல மாதங்களில் மஞ்சுவின் பரிச்சய பார்வையை பெற்றுவிட்டேன்.

மஞ்சுவிற்கான என் பசலையை ரூம்மேட்களிடமிருந்து நீண்ட நாள் மறைக்க முடியவில்லை. ஒரு இளமாலைப் பொழுதில் என் ரூம்மேட் அருண் , மப்பிலிருந்த செல்வத்திடமிருந்து சுடச்சுட ‘ மேட்டரை ‘ க் கரந்து அனைவருக்கும் பரிமாறிவிட்டார். அவ்வளவுதான் அன்றைய அவலானேன்.

“ ஏண்டா ஏதோ உடம்பை குறைக்கதான் நீ ஒடரதா நெனச்சா அந்த பொண்ணணக் கூட்டிட்டு ஒடரதுக்கு trial பார்த்துகிட்டு இருக்கே போல ! “

“ நீ மந்திரிச்சுவிட்ட கோழி ரேஞ்சுக்கு சுத்திகிட்டு இருக்கும்போதே ஏதோ மேட்டர்ன்னு தோனுச்சு ! இதானா அது ! “

“ மாப்ளே பார்த்துடா மைனர் பொண்ண டாவடிசேன்னு தெரிஞ்சுது ஓரங்கட்டி
‘ டின் ’ னு கட்டிருவானுங்க ! “ அக்கரையாய் ரியாஸ் அட்வைசினான்.

“ அதான பார்த்தேன். என்னடா நம்ம குண்டன் மெரினாவே அதிர்ர ரேஞ்சுக்கு 5 மணிக்கே ஒடரானேன்னு ! நீயெல்லாம் காலை 7 மணி அப்படிங்கறதையே பேப்பர்ல தானடா படிச்சிருக்கே.”

நாலாபுறமிருந்தும் comments ஏவுகணைகளாகப் பாய்ந்தன. வாயைத் திறந்தால் பொளந்துவிடுவார்கள் என்பதால் சிரிப்புடன் வழிந்துகொண்டே அமைதியாக அமர்ந்திருந்தேன். “ டேய் செல்வம் தனியா கெடைச்சே நீ செத்தேடா மவனே ! “ மனதுக்குள் கருவினேன்.

அந்த வாரத்தில் மேன்சன் வெளியே நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது எங்களைக் கடந்து சென்ற மஞ்சு என்னை special பார்வை பார்த்துவிட்டு போக அவ்வளவுதான் !

“ டேய் இவதான் ‘ உன் ஆளா? ‘ கேட்ட நண்பர்களிடம் வெட்கத்துடன் ஆமோதித்தேன். பின் பல நாட்களில் நண்பர்களுடன் இருக்கும் போது இல்லாத போது எனக்கு மஞ்சுவின் special பார்வைகள் கிடைத்தது.

ஒரு beach party யில் எல்லா விஷயங்களும் பேசி முடிந்துபோய் கடைசியில் பேச டாபிக் கிடைக்காமல் என் மஞ்சுவின் மேட்டரை எடுத்தனர். இனி கொஞ்ச நேரத்திற்கு நான் செத்தேன்.

“ குண்டா நீ எங்க கூட வர்றப்போ அவ எதிர்ல வந்தா உன்னைத்தாண்டா
பார்க்கிறா ! நாங்களும் பல தடவை பார்த்திட்டோம் “ ( பின்னே தினமும் காலைலே அவளுக்காக தேவுடு காக்கறது எனக்கு தானே தெரியும் ! )

“ மாப்ளே ! உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு ‘ லவ் வேவ்ஸ் ’ ஒடுதுடா ! “ கையை sin wave கணக்காக ஆட்டினான் ஆனந்த்.

“ பொண்ணும் நல்லாத்தான் இருக்கா ! உனக்கு ஏத்த ஜோடிதான் ! என்ஜாய் ! “


அவர்கள் பேச பேச எனக்குள் காதல் உடுக்கை தறிகெட்டு அடிக்க ஆரம்பித்தது.
இப்படிப் பேசிப் பேசியே மனச ரணகளமாக்குறான்களே !

“ நாளைக்கு முதல் வேளையா அவள்ட்ட போய் பேசிட வேண்டியதுதான். !” நினைத்துக்கொண்டிருந்த போதுதான் ஞாபகம் வந்தது.
“ மைனர் பொண்ணு ! முதுகுல டின்னு ! “ ரியாஸ் கூறியது அசரீரியாக ஒலித்தது. சரி இன்னும் ஒரு மாசத்துல காலேஜ் போய்டுவா அதுவரைக்கும் காத்திருப்போம் ! .

ஆயிற்று ! மஞ்சு காலேஜ் செல்ல ஆரம்பித்துவிட்டாள். அதுவரை 13B பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவள் இப்பொழுது 45B யில் செல்ல ஆரம்பித்தாள்.
இனி 45 Bயே என் தேவதை ரதம் !. எந்த கலேஜ்ல சேர்ந்திருக்கிறா ? டிடெக்டிவ் ஆக மாறி பல probability போட்டு பார்த்தேன். என் சக்திக்கு மீறியதாக இருந்தது.

என் ரூம் மேட் அருணிடம் ஒரு அசாத்திய திறமை இருந்தது. சென்னையில் ஓடும் பஸ் ரூட்டுகள் எல்லாம் அவரின் விரல் நுணியில் ! அதில் வேலை செய்யும் கண்டக்டர்களுக்கே இவர் ஸ்டாப்பிங் சொல்வார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சரி இந்த task கை அவரிடம் outsource பண்ணிட வேண்டியதுதான் ! மிகவும் பிகு பண்ணினார் அருண்.

“ ச்சீ ச்சீ என்னைய என்னான்னு நெனச்சுகிட்டு இருக்கீங்க ? போயும் போயும் ஒரு பொண்ணு போற இடத்தை கண்டுபிடிக்க சொல்றீங்களா! Never! என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்த்தென்ன ! “ சலங்கை கட்டாதகுறையாக ஆடினார். நான் கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியாக அருணை சாந்தமாக்கினேன்.

“ சரி அவளைப் பத்தி டீட்டெய்ல் சொல்லுங்க ! “ சந்தோஷமாக சொல்லத்தொடங்கினேன்.

“ தினமும் காலைலே 7 :30 மணிக்கு 45B ல கெளம்பிடறா அருண் ! அந்த பஸ் எந்த காலேஜ் வழியா போகும்? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்.” பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டுகேட்டேன்.

“ உங்க மூஞ்சியெல்லாம் பாக்கிறாளே ! நிச்சயம் ஏதாவது டுடோரியல் காலேஜ்ஜுக்குதான் போய்ட்டு இருப்பான்னு நெனைக்கறேன் ! “ கவலையேபடாமல் மஞ்சுவைப்பற்றி என் நெஞ்சில் ஆசிடை ஊற்றினார். “ யோவ் என்ன திமிர் ! இன்னொருநாள் உனக்கு வச்சுக்கறேன் கச்சேரிய ! “ மனதுக்குள் மட்டும்தான் கருவமுடிந்தது. கோவப்பட்டா காரியம் ஆகுமா ?

“ என்னங்க அருண் கொஞ்சம் சீரியஸா யோசிங்க ! அவ கையிலே drawing sheets எடுத்துட்டு போற குழாய் மதிரி இருக்குமே அதபார்த்தேன் “ எப்படியாவது அருணிடமிருந்து அவர் திறமையை கொணர பல டீட்டெய்ல்களை அள்ளிவீசினேன். ராக்கெட் ஏவும் விஞ்ஞானி மாதிரி அருண் பல கணக்குகளைப் போட்டார்.
“ நிச்சயம் அவ SIT காலேஜ்ல தான் படிக்கணும் ! “ அருண் வாக்கே அல்லாவின் வாக்காக அருணை வணங்கினேன். “ வாழ்க அருண் ! வளர்க அவர்
தொப்பை ! “ மானசீகமாக வாழ்த்தினேன்.

சரி operation ஐ ஆரம்பித்துவிட வேண்டியதுதான். என்ன ஆபரேசனா ? மஞ்சுகிட்டே பேசறதுதான் ! இதற்கும் அருணிடமே ஆலோசனை கேட்டேன்.
“ ஆமா ! பஸ்சில என்ன பேசமுடியும் ? தவிர நேர்ல பார்க்கிறப்போ பேசுறதுக்கு யோசிப்பா. அவளுக்குதான் உங்களைத்தெரியுமே ! பஸ்சில போறப்போ சந்தர்ப்பம் பார்த்து உங்க பேரு, போன் நம்பரை எழுதி அவகிட்ட கொடுத்த்துட்டு வந்திருங்க ! அதான் அந்தப் பார்வை உங்களைப் பார்க்கிறாளே ! நிச்சயம் போன் வரும் ! “ கிருஷ்ண பரமாத்மா கணக்காக எனக்கு உபதேசம் செய்தார். “
“ அருமையான யோசனை ! ரொம்ப தேங்ஸ் அருண் ! “

“ இன்னொரு விஷயம் ! நம்ம ஏரியாவுலகீது கொடுத்துறாதீங்க ! அவளுக்கு தெரிஞ்சவன் எவனாவது பார்த்திட்டு உங்களைப் பொளந்துடப் போறான் “ எச்சரித்தார்.
பயபக்தியோடு தலையாட்டினேன்.
“ பொண்ணு கெடைச்சாலும் புதன் கெடைக்காது. நாளைக்குதான் புதன் !
நாளைக்கே முடிச்சிருங்க ! All the Best ! “ அசீர்வதித்தார்.

அன்று இரவு தூக்கமே வரவில்லை. புதன் கிழமை. காலை 5 மணிக்கே எழுந்துவிட்டேன். குளித்து அரிதாரம் பூசி 7 மணிக்கெல்லாம் பக்கா கெட் அப்பில் இருந்தேன். தார்மீக ஆதரவாக அருண் பஸ் ஸ்டாப் வரை வந்தார். பாக்கெட்டில் தொட்டுப்பார்த்துக்கொண்டேன். என் பெயர் போன் நம்பர் எழுதிய சிறிய கார்ட் இருந்தது. மஞ்சுவும் நின்று கொண்டிருந்தாள். என்னைப்பார்த்தாளா ! தெரியவில்லை !

அதோ தூரத்தில் தெரிந்தது என் காதல் வாகனம். 45B மெல்ல அசைந்தாடி வந்து நின்றது. Crutial match ல் களமிறங்கும் வீரனை வழியனுப்புவது போல அருண் கைகளிலேயே வெற்றி என காட்டினார். கண்டக்டரிடம் “ ஒரு SIT “ டிக்கெட் வாங்கினேன். பஸ்ஸில் கூட்டம் குறைவாக இருந்தது. ச்சே ! மத்த நேரத்தில எல்லாம் எவ்ளோ கும்பலா இருக்கும் ! .நின்னுகிட்டு இருந்தாலாவது மஞ்சு பக்கத்திலே போய் நின்னுகலாம். என் ஆசையில் மண் விழுந்தது.
“ இங்க உக்கார்ந்துகுங்க ! “ ரொம்ப அக்கரையாக கூறினார் அருகிலிருந்தவர்.வேண்டா வெறுப்பாக அமர்ந்தேன். 4 சீட்களுக்கு முன் மஞ்சு அமர்ந்திருந்தாள்.

பஸ்ஸில் கும்பல் ஏறவேயில்லை. யாரவது கிழவி ஏறினால் எழுந்து இடம் கொடுக்கலாம் என்றால் கூட ஒருத்தரையும் காணோம் ! வேறு வழியில்லை. காலேஜ்ஜில் எப்படியும் இறங்குவாள். அப்போ கொடுத்திட வேண்டியதுதான்! எனக்கு நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன். என் இதயம் தெரித்து வெளியே விழுந்துவிடுவதைப் போல் துடித்தது.

“ SIT காலேஜ் இறங்கு “ கண்டக்டரின் குரல் கேட்டு எழுந்தேன். எந்த வழியாக இருங்குகிறாள் ? மஞ்சுவைப் பார்த்தேன். “ ஐய்யகோ ! என்ன இது ! ” அவள் எழும் அறிகுறியே இல்லை ! இப்போ என்ன பண்றது ? நான் வேறு SIT வரை தான் டிக்கெட் எடுத்திருந்தேன். சரி ஆவது ஆகட்டும் ! அவள் எங்கே இறங்குறா பார்க்கலாம். இடையில் Ticket checker வந்தா என்ன பன்றது ? பயம் வேறு ஒருபுறம் ஆட்டிப்படைத்தது. மஞ்சுவிற்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டேன்.

ஒரு வழியாக மஞ்சு கிண்டியில் இறங்கினாள். நல்லவேளை யாரும் டிக்கெட் கேட்கவில்லை. மஞ்சு இறங்கி நடக்க ஆரம்பித்தாள். வேகமாக நடையைக்கட்டி மஞ்சுவை நெருங்கினேன். “ Excuse me மஞ்சு ! “ சொல்ல வாயெடுத்தேன். திடீரென என்னை உரசியபடி ஒரு பைக் சென்று மஞ்சுவின் அருகில் நின்றது. டோனி ரேஞ்சுக்கு பைக்கில் ஒரு தடியன் ! அவனைக் கண்டதும் மஞ்சுவின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி ! “ சீக்கிரம் போ ! உனக்காக இன்னைக்கு காலேஜ் கட் அடிச்சிட்டு
வர்றேன் !” மஞ்சு அவனிடம் கொஞ்சிக்கொண்டே பைக்கின் பின்புறம் அமர்ந்து சென்றாள்

போக்ரான் அணுகுண்டு என் இதயத்தில் வெடித்தது.. “ மைனர் பொண்ணு பேசினா முதுகுல டின்னு ன்ணு என்னை தடுத்துட்டீங்களேடா! காலேஜ் சேர்ந்து ஒரு மாசந்தானே இருக்கும் அதுக்குள்ளயே எவனோ தேத்தீட்டான்யா தேத்தீட்டான் !
3 ரூபாய்க்கு பஸ்ஸில் கிண்டி வந்த நான் திரும்பி தனியே திருவல்லிகேணிக்கு 100 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்றபொழுது முன் சென்ற லாரியின் பின் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.
“ பெண்ணின் திருமண வயது 21 !” அப்போ காதலிக்கும் வயது ? யாராச்சும் சொல்லுங்கப்பா !! ப்ளீஸ் !

Wednesday, August 09, 2006

ஆஹாங் வந்துருச்சு !! - ஜொள்ஸ் வெளியீடு !!

Jolzஅப்போ நான் சென்னைக்கு வந்த புதுசு. கொஞ்சம் சுமாரான கும்பல் உள்ள ஊர்லே படிச்சிட்டு இங்க வந்தா எதுக்கெடுத்தாலும் திருவிழாக்கூட்டம்தான். டீக்கடைக்குப் போனா பஸ்ஸிலே போனா தியேட்டருக்கு போனா எங்கின போனாலும் கும்பல் கும்மியடிச்சிகிட்டு இருந்துச்சு. எங்கயாச்சும் போகனும்னு முடிவு பண்ணினா ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடியே கெளம்பினாத்தான் உண்டு. அதுலயும் சில சமயம் பஸ்சிலே போரப்போ ட்ராபிக் ஜாம் ஆயிடிச்சுன்னா அவ்ளேதான். முகூர்த்துக்கு போகமுடியாது சாந்தி முகூர்த்ததுக்குதான் போகமுடியும் .எவண்டா இவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு பஸ்சப் புடிச்சு போறதுன்னு ஊர்ல நம்ம் பைக் சும்மாதானே நிக்கிதுன்னு நம்ம நைனாவுக்கு போனப்போட்டு ‘பைக்’பார்சல்ன்னு சொல்லி அனுப்பிச்சேன். பைக் வந்துருச்சு. அப்படியே அடிதடி இல்லாம அலுங்காம குலுங்காம நகர்வலம் போறப்போ சும்மா கும்முன்னு இருக்கும்.


அப்போதான் கவனிச்சேன் இந்த ஊர்லே அல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துரானுவ. அதுலயும் இந்தப் பொண்ணுங்க பார்தீங்கண்ணா ஏதோ குரங்குகுட்டி எங்க கீழே விழுந்துருவனோன்னு அம்மாவை புடுசுக்குமே அதுமாதிரி பைக் ஓட்டுர பையனை பல்லி மாதிரி ஒட்டிகிட்டு போகுதுங்க !சரி சிக்னல்ல நிக்கிரப்போவாச்சும் கொஞ்சம் வெலகுமான்னு பார்த்தா ம்ஹூம் கவலையே படாம அவனோட காதப் புடிச்சி பெராண்டிறது கிச்சி கிச்சி மூட்டுரதுன்னு அமர்க்களப் படுத்துதுங்க ! இதுலே துப்பட்டாவால முகத்தை வேற மூடிகிட்டு தான் இத்தனை அட்டகாசமும். எனக்கும் இவுகளப் பார்த்து ஒரு மாதிரி ஆகிபோச்சு. என் பைக் பில்லியனைப் பார்த்தேன். காலியாத்தேன் இருக்கு.

மேன்சனில் என் ரூம் மேட்டுகிட்டே என் ஆதங்கத்தை சொன்னேன். பய குஜாலாய்ட்டான். மாமே அதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே கெடையாது. பைக் வேற வெச்சுருகே. உனக்கென்னடா கொரச்சல்.ரூம் மேட் சொல்ல சொல்ல மனசு ஒத்தை வீலில் பக் ஓட்டியது. என்ன ஒரு சின்ன சிக்கல்னா விட்டிலே நம்ம அம்மா தன்னோ பாசத்தையெல்லாம் நெய்யும் முட்டையுமா காட்டுனதுலே நம்ம உடம்பு என் அம்மாவோட மனசு மாதிரியே பெருசாய்டுச்சு ! என் பின்னாடி பைக்கிலே ஒக்காரவே பசங்க கொஞ்சம் யோசிப்பானுக. இப்படியான நெலமையிலே தான் இப்படிபட்ட ஆசையெல்லாம் லேசா எட்டிபார்க்க ஆரம்பிச்சு இருந்துச்சு. டேய் என்னைய நேர்லே பார்த்தா பொண்ணுங்கெல்லாம் அரிசி மூட்டைன்னு ஓட்டி எடுத்துருவாளுகடா ன்னு பரிதாபம கேட்டப்போதான் ‘போடாங்க’ ன்னு ஒரு பார்வை பார்த்தான். ஏண்டா இப்பேல்லாம் இண்டர்நெட் , சாட்டுன்னு எவ்ளோ வழி இருக்கு. இப்போதானே பிள்ளையார் சுழி போட்டுருக்கே! இன்னும் போக வேண்டிய தூரம் இருக்குடா’ன்னு ஆறுதல் சொல்லி இப்போவே ஏதாச்சும் நெட் கபேக்கு போலான்னு கெளம்பீட்டான். ஒருத்தனை கவுக்கறதுக்குன்னா பாருங்களேன் எப்படி அலையரானுவ.

என்ன பண்றது? பய எனக்கு நெட்டு சாட்டுன்னு நமக்கு சொல்லிக்கொடுத்தான். காலேஜிலே கம்ப்யூட்டர் லேப்னாலே காத தூரம் ஓடுர நான் இவன் சொல்லிக் கொடுத்தபோ பயபக்கியோட கேட்டுகிட்டேன். ஆசை யாரை விட்டுச்சு? அதுக்கபுறம் எனக்கு காலையிலே பைக்க எடுத்துகிட்டு நெட் சென்டர்லே நுழைஞ்சா சும்மா கதறக் கதற சாட் பண்றதுதான் நம்ம முழுநேர வேலையாப் போச்சு.. பேசறது பையானா பொண்ணான்னு கண்டே பிடிக்க முடியாது. இருந்தாலும் நம்பிக்கையோட ஆரம்பிச்சேன் என் தேடுதல் வேட்டைய. சில பொண்ணுங்க ரொம்ம நேரம் பேசி நம்மளை ஏத்திவிட்டுட்டு நான் பையன்ன்னு சொல்லி நம்ம நெஞ்சிலே பழுக்க காய்ச்சி இழுத்துட்டு போகும்.சிலதுக பயங்கரமான கோபத்திலே எப்பவுமே இருக்கும் இப்படி பலதுக. தெனமும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனாய் நானும் என் சாட்டிங்கும். இப்படியாக ஒரு மாசம் போயிருக்கும் அப்போதான் ஒருநாள் சாட்டிங்கில் அவள் வந்தாள்.

பேரு சுமா ஊரு சென்னைன்னு வழக்கம் போல ஆரம்பிச்சாச்சு. இது எவ்ளொ நேரதுக்கு ஓடுமோன்னு நெனச்சுகிட்டே சாட் பண்ணிகிட்டு இருந்தேன். இப்படியாக தினமும் காலையிலே சுமா ஆன்லைனில் என்னுடன் சாட் பண்ண ஆரம்பித்தாள். என்னிக்காச்சும் அவளை ஆன்லைனில் பார்க்க முடியலைனா போதும் மனசு கெடந்து அடிச்சிக்கும். என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு. கொஞ்சம் கொஞ்சமா சுமா என் மனசுகுள்ளே வர ஆரம்பிச்சிட்டா ! தேவையிலாம ‘காதலர் தினம்’ படம் வேற பேக் க்ரண்டில் ஒட ஆரம்பிக்கும். சோனாலி பேந்ரே மாதிரி இருக்பாளோ?? லேசு பாசா அவகிட்டயே கேட்டா என் கண்ணு மீனா மாதிரி இருக்கும். இப்போதைக்கு அவ்ளோததன் சொல்ல முடியும்னு சொல்லிட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவா ! நம்மளைப் பத்தி கேட்டா போதும் நான் லேசா சூர்யா சாயல்ன்னு என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவானுகன்னு பட்டும் படாமலும் சொல்லுவேன். ஏன்னா சூர்யாவைத்தான் பல பொண்ணுகளுக்கு புடிக்குமாம்லே?? காசா பணமா அளந்து வுடுடா பாண்டின்னு சும்மா மடை திறந்த வெள்ளம் போல புழுகுதான்.


இப்படியாக போய்கிட்டு இருந்தப்போதான் ஒருநாள் என் போன் நம்பர் கேட்டா. நானும் கொடுத்தேன். அன்னிக்கு சாயங்காலமே எனக்கு போன் சுமா கிட்டே இருந்து. ஆஹா பாண்டி ஒரு பொண்ணு அதுவும் சென்னையிலே முதோ முதலா கேர்ள்ப்ரெண்டு கெடச்சுட்டா !!! கத்திகிட்டே ஓடணும்போல இருக்கு. சும்மா சொல்லக் கூடாது சுமாவுக்கு அப்படியொரு குரல் வளம் . அப்படியே தேனிலே கரைச்ச வெண்ணை மாதிரி வழுக்கிகிட்டு ஓடுது. ஒரே குஜால்ஸ் தான் போங்க. அப்புறம் என்ன போன்லதான் சாட் ! போன் பில் கணக்கு கன்னா பின்னான்னு எகிற ஆரம்பிச்சிடுச்சு. நம்ம ரூம் மேட்டுக்கு ஒரே ஆச்சரியம் அப்புறம் கொஞ்சம் பொறாமை வேற. வாலிப வயசிலே இதெலாம் சகஜமபான்னு நானும் பேசிகிட்டே இருப்போம். இன்னமும் சுமா எப்படி இருபான்னு எனக்கு தெரியலே. ஒருநாளாச்ச்சும் நேரிலே பார்க்கலாம்னா பிடி கொடுக்கவே மாட்டேங்கறா. பல சினிமாக்கள் வேற பார்க்காமல் காதல் பேசாமல் காதல் காதலே இலாமல் காதல்ன்னு நம்ம கோடம்பாக்கம் டைரக்டர்கள் எல்லாம் காதல் கோடாங்கிகளா மாறி எனக்கு அவங்க படம் மூலமா பல்வேறு கற்பனைகளை அள்ளித் தெளிச்சி விட்டிருந்தாங்க. காதல் கோட்டை தேவயாணி போல இருப்பாளா ? இல்லை காதலர் தினம் சோனாலி பெந்தரே?? இப்படியேல்லாம் கனவிலேயெல்லாம் கூட வர ஆரம்பிச்சிடுச்சு.

இதுலே எனக்கு வர்ர போன் கால்களைப் பத்தி எங்க பசங்க மத்தியிலேவேற பல்வேறு கற்பனை கதைகள். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மெஸ் மீல்ஸை ஒரு கட்டு கட்டிவிட்டு ஏகாந்தமா படுத்து தூங்கிகிட்டு இருக்கறப்போ போன் வந்தது. அட என் சுமா !!! என்ன சுமா ன்னு பேச ஆரம்பிச்சா ‘பாண்டி கொஞ்சம் நான் சொல்ற இடதுக்கு உடனே வர முடியுமா? நான் வந்த வண்டி பாதி வழியிலே பஞ்சர் ஆய்டுச்சு. ஞாயித்துக் கிழமைங்கரனால கடையே இல்லை. அப்போதான் உன் ஞாபகம் வந்துச்ச்சு. கொஞ்சம் வர முடியுமா? நான் ப்ளாக் ஜீன்ஸும் ரெட் டிசர்ட்டும் போட்டு நின்னுகிட்டு இருப்பேன்..நீங்க இருக்கற இடதுக்கு பக்கதுல தான் இருக்கேன் ப்ளீஸ் !!! ‘ அந்தகுரல்ல இருந்த ‘ப்ளீஸ்’ ஆகா ‘இதற்குத்தானடா ஆசைபட்டாய் பாண்டின்னு’ மனசு கெடந்து அடிச்சிக்குது. கமான் சீக்கிரம் கெளம்பு உன் பைக் காதல் ரதமாகப் போகுது ? ஆமா நான் உக்கார்ந்தா அவ உக்கார இடம் இருக்குமா. நம்ம சைஸ்ஸை பார்த்து எஸ்கேப் ஆய்டுவாளோ?? ச்சேசே முடியாதே அதான் நடு ரோட்டுலே நிக்கிறாளே !!

எக்ஸ்ரா ரைஸ் உபயத்தில் ரூம் மேட் வாயப் பொளந்து தூங்கிகிட்டு இருந்தான்.
சத்தமில்லாம கெளம்பினேன் வந்து சொல்லிக்கலாம் இந்த சேதின்னு. பைக்கிலே உட்கார்துகிட்டு பின்னாடி கஷ்டப் பட்டு பார்க்க முயற்சித்தேன் முடியல!. இருக்கு கொஞ்சம் இடம் இருக்கும் எப்படியும் என்னைய இடிக்காம அவ ஒக்கார முடியாது. என்ன ஒரு சந்தோசம்! சுமா சொன்ன இடம் நான் இருக்கர இடத்திலிருந்து எப்படியும் ஒரு 6 கிலோமீட்டராவது இருக்கும். பல்வேறு கற்பனையோட போய்கிட்டே இருந்தேன். அவ சொன்ன இடம் வரப்போகுது. பரபரப்பா இருக்கு எனக்கு. துரத்திலே தெரியுதே சிகப்பு கலர் அவ தானோ?? மிதமான வேகதில்தான் சென்றேன். நான் எப்படியிருபேன் எந்த வண்டியில் வருவேன்லாம் அவகிட்டே நான் சொல்லலே. எல்லாம் ஒரு திரில்லுக்குதான் !

அதோ தூரத்திலே ஒரு வண்டியும் அது பக்கத்திலே ஒரு பொண்ணுபோல தெரியுதே. அப்போதுதான் கவனிச்சேன். சுமா சாதரணமாக இல்லை ஒரு சுமோ ரெஸ்லர் ரேஞ்சுக்கு என்னைப்போல இருமடங்கு சைஸில் !!! அய்யகோ இதென்ன சோதனை. தேவயாணி, சொனாலி பேந்ரே எல்லாம் சினிமாவில தானா?? எனக்கா இப்படியாக வேண்டும்? சுமா என் பைக்கில் உக்கார்ந்தா நெசம்மாலுமே பைக் ஒத்தை வீலில்தால் போகும். எப்படிடா பாண்டி தப்பிக்க போறே?? அவளுக்குதான் நான் எப்படி இருபேன்னு தெரியாதே ! போனை எடுத்தேன். ‘சுமா நான் வந்துகிட்டு இருந்தபோ பாதி வழியிலே என் வண்டியும் பஞ்சர் ஆய்டுச்சு. சாரிடா.’


Tuesday, August 08, 2006

ஆஹாங் வந்துருச்சு !!! ( குங்குமம் வெளியீடு )

குங்குமத்தில் வந்த என்னோட கதையை ஸ்கேன் பண்ணி போட்டிருக்கேன். பார்த்து படிங்கப்பூ!!! :))


Monday, August 07, 2006

நன்றி பாலா !!

நன்றி பாலா


நமக்கு இந்த சின்ன வயசில இருந்தே போட்டி போடருதுன்னா சுத்தமா புடிக்காது ! படிக்கரதுல இருந்து ஓடரது வரைக்கு எதுலையுமே போட்டி போட்டதே இல்லை ! போட்டின்னு ஒன்னு போட்டாதானே தோல்வின்னு ஒன்னு வரும்? இப்படிப்பட்ட உயரிய லட்சியத்தோடு ( சேம்பேறித்தனத்தை எப்படி சொல்றதாம்?) வாழ்ந்துகிட்டு இருக்கறப்போதான் அண்ணன் பாலாஒரு அறிவிப்பை வெளியிட்டாரு.

குங்குமத்தில புது முகங்கள் எழுத வாய்ப்பு!! நான் வழக்கம் போல அதைய படிசிட்டு விட்டுடேன்.பாலாண்ணன் கொடுத்த தேதியும் முடிஞ்சுபோச்சு ! அன்னிக்கு சாயங்காலம் ஒரு போன். போன்ல நம்ம பாலாண்ணன் !!! என்னாவே பாண்டி நான் கொடுத்த அறிவிப்பை படிச்சியா இல்லயான்னாரு.அண்ணே வழக்கம் போல நான் படிசிட்டு மறந்துட்டண்ணேன்னேன் அவ்ளோதான் பாலாண்ணே கதக்களி குச்சிப்புடின்னு போன்லயே நம்மளைப் போட்டு பிண்ணிட்டாரு. ஒழுங்கு மருவாதையா ஒரு கதைய நாளைக்கு காலைல 10 மணிக்குள்ளார அனுப்பலைனா நடக்கறதே வேறன்னு கொலை மிரட்டல் வேற !! என்ன பண்ணுவேன் ! உயிரைக் கையிலே பிடிச்சிகிட்டு ஒரு கதைய எழுதி அணுப்பினேன் !!

அது இந்த வார குங்குமத்தில் “ ஆஹா வந்துருச்சு ! “ . கதையோட தலைப்பும் அதுதான் ! முதோ முதலா நம்ம எழுத்தை அச்சுல பார்குரப்போ என்னே ஒரு சந்தோசம் !! ஒரு சூப்பர் Figure எங்கிட்டே வந்து பேசுன மாதிரி !! காலையிலே இருந்து தலை கால் புரியலே !!

அண்ணன் பாலா என்னைய புடிச்சு இப்படி போட்டு வாங்கலைனா என்னால இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிச்சிருக்க முடியாது !! பாலாண்ணே ரொம்ப நன்றிங்கண்ணா !!!

குங்குமத்தை நீங்க இங்க இருந்தே படிச்சிக்கலாம் ! ஆனா இந்த வார குங்குமம் இன்னும் update ஆகவில்லை. குங்குமத்திலே வந்த நம்ம கதைய உங்களுக்காகவே ஆஹா வந்துருச்சு - uncensored version கூடிய விரைவில் வலையேத்துகிறேன் !

கூடவே நம்ம சக வலைப்பதிவாளர்கள் நிலவு நண்பன்,பொன்ஸ்,விழியன்,அனிதா பவன்குமார், நிலாக்கா, ஜெஸிலா, மற்றும் ராசுக்குட்டி அவர்களுடைய கவிதைகளும் வந்திருக்கு. அல்லாருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேனுங்கோ !!