Tuesday, November 21, 2006

சென்னை வலைப்பதிவர் ( ரகசிய ) சந்திப்பு !!

Image Hosted by ImageShack.us
நம்ம வலைப்பதிவர்கள் எழுதினாலும் பரபரப்புதான், சந்திச்சுகிட்டாலும் பரபரப்புதான். ஞாயித்துக்கிழமை நடந்த வலைப்பதிவர் சந்திப்புல ஊடால பூந்து சந்திப்பு நடக்க நடக்கவே படத்தை ப்ளாக்கிலே ஏத்தி எல்லார்கிட்டயும் வாங்கிகட்டிகிட்டாரு நம்ம இட்லிவடையார். இதுனால பலபேருக்கு ரத்தகொதிப்பு வந்து இட்லிவடையை பிரிச்சு மேய்ஞ்சு இட்லி உப்புமா ஆக்கீட்டாங்க. இதிலே மிகவும் ஆவேசமா கொலைவெறியோட சுத்திகிட்டு இருக்குர நம்ம ஆருயிர் அண்ணன் லக்கிலுக்கார் இனி தன் வாழ்கையிலே இட்லிவடையை சாப்பிடவே போறதில்லைன்னு பகிரங்க தீர்மானம் நிறைவேற்றியதோட நிக்காம ஆங்காங்கே ஓட்டல் முன்பு நின்னு தன்னோட லக்கி லுக் கொலைவெறி ரசிகர் மன்றம் சார்பா ‘ இட்லி உண்ணா ‘ விரத போராட்டம் நடத்தப்போரதா தகவல் வந்து இருக்குர சூழ்நிலையிலே இனிமே இந்த மாதிரி நடக்காரதை தடுக்கும் தீர்மானத்துடன் மீண்டும் ரகசிய வலைப்பதிவர் சந்திப்பு லக்கிலுக்காரின் பாசறை அமைந்திருக்கும் மடிப்பாக்கத்தில் வரவணையாளன் தலைமையில் உடனடியாக கூடுகிறது. இந்த சந்திப்பையும் இட்லிவடையார் சட்டினி வடிவத்தில்கூட வந்து கவர் செய்து விடுவார் என்ற எச்சரிகை உணர்வுடன் லக்கிலுக்கார் சுத்துவட்டாரங்களில் வெஜிடேரியன் ஓட்டல்களே இல்லாத இடத்தில் தனது பாசறையை அமைத்து இருக்கிறார். இதுவும் பத்தாதுன்னு ஆங்காங்கே தன்னோட ரசிகர் மன்ற ஆட்களை இட்லிமாவு சப்ளை செய்யும் கடை முன்பு நிறுத்தி கண்காணிப்பை பலப்படுத்தி கொண்டிருக்கிறார். எஸ்கே ஐயா அவர்கள் கொந்தளித்துக்கொண்டு இருக்கும் வலைப்பதிவர்களுக்கு pressure மாத்திரைகளை அளித்துக்கொண்டிருக்கிறார். இனி Over to மீட்டிங்.

லக்கி : இது அநியாயம் அக்குரமம். இப்படி இனி நடக்கவே கூடாது என்ன ஒரு தைரியம் யார் கொடுத்தது அவருக்கு இந்த தைரியத்தை ??

விக்கி : இட்லி வடை இப்படி பண்ணி இனி நம்மளை வெளியே தலை காட்டவே முடியாம பண்ணீட்டாரே . இனி வெளிய போனா அவ்வளவுதான் ! இனி ஆட்டோ வரப்போகுதோ இல்லை ஆட்டோகிராப் வாங்கபோறாங்களோ தெரியலையே !!!

பொன்ஸ் : தெரியாதனமா என் குரலை ப்ளாக்கிலே போட்டதுக்கே ஆஹா குரலு நல்லாருக்கு கலரு நல்லாருக்கு வர்ற கமெண்டுக தொல்லை வேற ஒரே தலைவலியா இருக்கு இதிலே இந்த இட்லிவேற படத்தைப்போட்டுட்டாரு எப்படி சமாளிக்கரதோ ?? !!!

சிவகுமார் : இது போன்ற நிகழ்வுகள் நம்மை அடையாளம் காட்டும் என்பது ஒருபுறமிருக்க நம் அடையாளமாக நம் எழுதுக்கள் எங்கே போகும் என விவாதிப்பதற்கு ஒரு நல்ல களம் அமைத்துக்கொடுதிருக்கிறது என்றால் மிகையாகாது என்றாலும் அத்துமீறல் உரிமைப்பிரச்சனை ஆகுமா எனற தெளிவு நம்மிடையே இருக்கவேண்டும் .

வரவணை : ஐயா லக்கி சோடா எங்கப்பா ??

மரப்பூரார் : வலைப்பதிவை வடைப்பதிவில் வெளியிட்டதிற்கு கண்டனம் தெரிவிக்கும் தருணத்தில் வருகைப்பதிவேட்டில் என் வருகையை இருட்டடிப்பு செய்ய நிகழ்ந்த சதிட்டங்களுக்கும் என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன் .

லக்கி : இதைய இப்படியே விட்டா இட்லிவடை இனி மீட்டிங்குன்னு சொன்னாலே இதோ அருள் டீ வழங்கிக்கொண்டிருக்கிரார். இப்பொழுதுதான் லக்கி சேரை தூக்கிக்கொண்டு முன்வரிசைக்கு முந்துகிறார்னு ரன்னிங்க கமெண்டரியே கொடுப்பாரு போல இருக்கே !!

பொன்ஸ் : இனி அப்படியே போட்டோ எடுத்தாலும் யாருடைய முகமும் தெரியக்கூடாது. அதுக்கு இனி எல்லாருக்கும் யானை முகமூடியை toys kemp ல் இருந்து மொத்தமாக ஆர்டர் செய்துவிட்டால் என்ன ?

விக்கி : பேசாமல் நமது அடுத்த வலைப்பதிவர் சந்திப்பை தான்சானியாவில் ‘ கிகிடோ முசாமி ‘ மகாலில் வச்சுக்கலாமா ? பார்வதி மஹாலை கண்டுபிடிச்ச மாதிரி ஈசியா இட்லி நுழைய முடியாது.

வீ பீபுள் : இந்தியனா இருந்துகிட்டு விந்திய மலைச்சாரலை மறந்ததேன் ?? தன்சானியா ஓட வேண்டிய அவசியம் என்ன ? சென்னையிலேயே தாம்பரத்தின் தென் மேற்கே பால மலை அடிவாரத்தில் ‘குடில்கொண்டான் வலசு’ வை புறக்கணிப்பதேன் ?

சிமுலேசன் : ஏன் ஆப்கானிஸ்தானில் தோராபோரா மலைகுகையில் அடுத்த வலைஞர்கள் மீட்டிங்கை வைத்தால் என்ன ? அமெரிக்காவே நெருங்க முடியாத இடத்தில் இட்லி என்ன செய்யும் ??

டோண்டு : இது போன்ற தகவல் பரவலைத் தடுக்க இஸ்ரேலியர்கள் ஒரு அருமையான தொழில் நுட்பத்தை வைத்து இருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன் என்றால் ஏன் என்று யோசித்துப்பார்க்க வேண்டும்

பாலா : ( மனசுக்குள் )ஆஹா ஆரம்பிச்சிட்டாரே . ( சத்தமாக ) யப்பா அருள் அந்த பொருளை கொண்டுவந்தியா ??

அருள் : ம்ம் இதோ ?

பொருளை எடுத்துக்கொண்டு வந்து பயபக்தியுடன் பாலாவிடம் கொடுக்கிறார்.
அதிர்ச்சியுடன் அனைவரும் பாலாவைப்பர்க்கின்றனர்

பாலா : வலையுலக சுனாமி களம் கண்டால் தினவெடுக்கும் தோள்வேந்தன் மடிப்பாக்கம் கண்ட மாவீரன் அண்ணன் லக்கியாருக்கு சென்னைபட்டிணம் சார்பாக
‘ வலையுலக சின்னக்குத்தூசி ‘ என்ற பட்டத்தினை அளிக்கிறோம். நினைவுப்பரிசாக தங்கவாள் அளிக்க மனமிருந்தாலும் மார்க்கமில்லாததால் இந்த ‘ கோணி ஊசி ‘ யை அளிக்கிறோம்

சென்னைபட்டிணம் உறுப்பினர்கள் அனைவரும் போட்டோவிற்கு ' கோணிஊசி 'யை கொடுப்பதாக ‘போஸ் ‘ கொடுக்க லக்கியார் மட்டும் கேமராவுக்கு முதுகு காட்டி அதை பெற்றுக்கொள்கிறார்.

அப்போது திடீரென ஒரு பாடல்

“ பார்க்காத என்னப் பார்காத
ஒரு பார்வையால என்னப் பார்க்காத “

பார்த்தால் பொன்ஸின் மொபைல் போன் பாடி அலறுகிறது . மொபைலில் நாமக்கல் சிபி !! எடுக்கிறார் பொன்ஸ் .

சிபி : பொன்ஸ் இப்போதான் நம்ம இந்தியா தென்னாப்பிரிக்கா மேட்ச் பார்க்கலாம்னு TV ய போட்டேன் .

பொன்ஸ் : சீக்கிரம் சொல்லுங்க சிபி !! இங்க வரலாற்றையே புரட்டிபோடுர விவாதம் நடந்துகிட்டு இருக்கு. இதுலே நீங்க வேற கிரிகெட்டுன்னு !!!

சிபி : அம்மணி பொறுமை ! பொறுமை ! உங்க மீட்டிங் அப்படியே ESPN Channel ல LIVE வா தெரியுதுன்னு சொல்ல வந்தேன் . கீழே Courtesy : இட்லிவடை ன்னு வேற ஓடுதே !!

தகவலை பொன்ஸ் அனைவருக்கும் சொல்ல மிக்கப்பெரிய அதிர்ச்சிக்குளாகிறார்கள்.

லக்கி : ( உரத்தகுரலில் ) இட்லிவடைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............ என அலறிக்கொண்டே ஓட அனைவரும் லக்கியை பின்தொடர்ந்து தெரித்து ஓடி எஸ்கேப் ஆகிறார்கள் .


( பின்குறிப்பு : - வழக்கம் போல தமாசா எடுதுக்குங்க மக்களா !! உதைகிறதுன்னா பார்த்து உதைங்கப்பா. அப்புறம் அழுதுடுவேன் !!! )