Tuesday, February 20, 2007

எச்சரிக்கை : ஜொள்ளனும் காதலிக்கக்கூடும் !
ஜொள்ளனும் காதலிக்கக்கூடும்

ஆஹா இந்த வேலண்டைன்ஸ் டே வந்தாலும் வந்துச்சு நம்ம ப்ளாக் மக்கள் காதலை அப்படியே தமிழ்மணத்திலே கவிதையா கடைஞ்சு தேன்கூட்டைப்பிழிஞ்சு தேனா அமுதமா நம்ம கடைவாயிலே வச்சு தினி தினின்னு தினுச்சுட்டாங்க. அப்பா அம்மான்னு காதல் கவிதை கடல்ல இருந்து மூச்சு முட்டி முக்கித்தக்கி வெளியே வந்து பார்த்தா இன்னமும் அலை ஓயலை. விட்டா இங்க பாருடா ஒருத்தன் காதலிக்காம சும்ம சுத்திகிட்டு இருக்கான்னு கையிலே ரெண்டு காதலிய / கதலனை திணிச்சு விட்டுடுவாங்க போல இருக்கு !

ஏண்டா இவ்ளோ பேரு கவிதைய போட்டு பின்னி பொடல் எடுக்குறாங்களே என்ன விசயம்ன்னு கேட்டா அட கேணையேன்னு பார்த்துட்டு நீயெல்லாம் எழுதறேன்னு வெளிய சொல்லிக்க வெக்கமா இல்லை? வேலண்டைண்ஸ் டேக்கு ரெண்டு கவிதை எழுத வக்கில்லாம நீயெல்லாம் ஜொள்ளன்னு வேற பீத்திகிட்டு அலையறேன்னு நம்ம தம்பி செல்லமா கோவிச்சிகிட்டாரு. சரி அல்லாரும் இந்த காதல் கவிதை கடல்ல அப்படியேக்கா பல்டி அடிச்சு மூழ்கி பிகர் தேத்தராங்கலே நாமளும் ஒரு try உட்டு பார்த்தாதான் என்னான்னு தோணுச்சு.

சரின்னு எடுத்தேன் நம்ம போனாவ தட்டுனேன் நம்ம மூளைய ( இருக்கான்னு எல்லம் கேக்கப்பிடாது ஒகே? ) . இதோ காதல் என்ற இன்பத்தேன் சொட்ட சொட்ட நாமளும் அள்ளித்தெளிச்சிருக்கோம்லே ?!! அல்லாரும் படிச்சுபிட்டு காதல் பித்து பிடிச்சு அலஞ்சா நான் பொறுப்பில்லேன்னு தாழ்மையுடன் ஜொள்ளிக்கொள்கிறேன்.

எச்சரிக்கை 1 :
கவிதைய படிக்கும் போது காலில் செருப்பு இருக்கு அப்படீங்கறதை மறந்திடனும் சொல்லிபுட்டேன்

எச்சரிக்கை 2 :
கவிதைய படிச்சுபிட்டு இப்போவே சுடச்சுட காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்கனும் எல்லாம் நெனக்காதீங்க ! உடனே கொடுத்துடுங்க ஹிஹிஹிஹிஹிஹி

இனி ஓவர் டு என் கவிதை ஜொள்ளனும் காதலிக்கக்கூடும் ”


அவன் பார்த்துருவானோ?
இவன் போட்டுக்கொடுத்துடுவானோ?
இவ அண்ணன் பின்னீடுவானோ?
அவ அப்பன் சுளுக்கெடுத்துடுவானோ?
இப்படி பயந்து பயந்தே
எவ்ளோ நாளைக்குதான் சாவறது?
முடிவு பண்ணிட்டேன்
இப்போதைக்கு உனக்கு
லவ்லெட்டர் கொடுக்கறதில்லைன்னு ஹிஹிஹிஹி

இப்போல்லாம் நான்
படுத்துகிட்டே தூங்கறேன்
உக்கார்துகிட்டே சாப்புடறேன்
ஏன் நடந்துகிட்டே
பாட்டுகேட்கிறேன்
ஏன்னு உனக்கு புரியுதா??
அடி சிறுக்கி நான்
உன்னைய லவ் பண்றேண்டி !!

உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!

நீ ரொம்ப அழகா இருக்கேன்னு
சொல்றதுக்கு எனக்கே கொஞ்சம்
கஷ்டமாதான் இருக்கு
என்ன பண்றது ?
உனக்காக இந்த பொய்யகூட
சொல்லலைன்னா நான் எல்லாம்
என்ன காதலன் ??

Tuesday, February 06, 2007

ரயில் மயில் !

ரயில் மயில்


எப்பவுமே இந்த ரயிலுல போறது நமக்கு ரொம்ப பிடிச்ச விசயம். ஆனா பாருங்க இந்த ரயிலுல கூட வர்ற மயிலுகளைப் பார்க்கறதுக்கான பாக்கியம் நமக்கு எப்பவுமே வாய்ச்சது இல்லை. அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை என் கம்பார்ட்மெண்டில் மட்டும் எப்பவுமே நம்ம கூட வர்றதெல்லாம் ரிட்டயர்ட்மெண்ட் வாங்கி 10 வருசம் ஆன பல்லுப்போன பாட்டிகளும் ஜொள்ளுப்போன தாத்தாக்களும் தான். என்னாடா இது ?? ஒருவேளை இப்படி நம்ம கூட எந்த ஒரு கண்ணுக்கினிய கட்டிளங்கன்னிகளையும் வரவிடாம இருக்குறதுக்கு காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியோ?? ன்லாம் ‘அப்பர்’ பெர்த்திலே மல்லாக்கப் படுத்துகிட்டு நெம்ப நாள் யோசனை பண்ணிகிட்டு இருந்திருக்கேன். இதிலே எப்பவும் யாராச்சும் ஒரு தாத்தாவோ பாட்டியோ தன்னோட பேராண்டியா நெனச்சுகிட்டு உரிமையோட என்னோட லோயர் பெர்த்தை கேட்டு வாங்கிக்குவாங்க. நமக்குத்தான் எந்த பெர்த்திலே படுத்தா என்ன கூட என்ன பிகரா வருது பார்த்துகிட்டு கெடக்க? ன்னு போய் படுத்துக்குவேன்.

சென்னைக்கு கெளம்புற அன்னிக்கு ஒருநா ராத்திரி ரயில்வே ஸ்டேசன்ல நின்னுகிட்டு இருத்தேன். அப்படியேக்கா தலைய சுத்தி சுத்திநிக்குற கூட்டத்தைப்பார்த்தேன். இதிலே எந்த பாட்டி இன்னிக்கு நம்ம கூட வரப்போகுதோன்னு சுவாரஸ்யம் இல்லாம பார்த்துகிட்டு இருந்தா திடீர்னு கினி கினி கினின்னு மணியடிக்குது. ரயிலு வரலீங்க !! ஒயிலா ஒய்யாரமா அப்படியே கூந்தலை விரிச்சுகிட்டு ஒரு மயிலு !! அப்படியே நம்ம ஹார்ட்டு சும்மா 100 KM / Hr ல துடிக்க ஆரம்பிக்குது, கூட அப்படியே நம்ம ஆளை ஒரு இருவது வருசதுக்கு மிந்தி ஜெராக்ஸ் எடுத்த மாதிரி ஒரு அம்மா !! ஆஹா அவ அம்மா போல இருக்கே !! ஆனா அந்த அம்மாவை நான் எங்கியோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நெனச்சுகிட்டு இருக்குறப்போதான் தோணுச்சு “ அட நாயே தேவையில்லாத விசயமெல்லாம் இப்போ எதுக்கு ? பொரிச்சு வச்ச அரிசிப்பொரி கணக்கா வர்ற பொண்ணைப் பாருடா !! “ அம்பாள் வெள்ளை டாப்ஸும் கருப்பு லோவரும் போட்டுகிட்டு நடக்குது ! . எந்த ட்ரெஸ் போட்டாலும் செலருக்குத்தான் அசத்தலா இருக்குங்க. நம்ம ஜிங்கிலிக்கு அசத்தாலா இருந்துச்சுன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா என்ன ?

ரெயிலு வந்துருச்சு அப்படியேக்கா நம்ம கம்பார்ட்மெண்டை தேடிப்போய் என் சீட்டிலே ஒட்காருறேன் அடங்கொக்க மக்கா!! இது நம்ம சீட்டூதானா ?? ன்னு சந்தேகம் வந்துடுச்சு !! பாரம்பரியமா நம்ம கூட வர்ற தாத்தா பாட்டிகளை எதிர்பார்த்துகிட்டு போனா அங்கன சீவி முடிஞ்ச ஷில்பாஷெட்டி கணக்கா ஒய்யாரமா உக்கார்துகிட்டு இருக்குது ஜிங்கிலி என் பைங்கிளி !! ( ராஜேந்தர் பட டைட்டில் கணக்கா இருக்கா ?? ) வெளியிலே அவ அம்மா !! அட தனியாத்தான் போறாளா ?? அட அட அட பாண்டி உனக்கு இம்பூட்டு யோகமா ?? 10 செகண்ட் தொடர்ந்து பார்க்கமாட்டமான்னு நாம நெனச்சுகிட்டு இருக்குற பிகர் 10 மணிநேரம் உங்க கூட அதுவும் எட்டிக்கிள்ளுற தூரத்திலே (சும்மா ஒரு பேச்சுக்குதான்கேச்சுகிடாதீங்க!) உக்கார்துகிட்டு வந்தா என்ன பண்ணறது ?? ஆத்தா! அம்மா! என்ன பண்ணறதுன்னே தெரியலையே!? “மீட் மை சவுத் இண்டியன் டயானா !! “ ன்னு சொல்றதுக்கூட எந்த ஒரு ஆப்பவாயனும் பக்கத்திலே இல்லையேன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது ! பொண்ண அனுப்பீட்டு அத்தை கெளம்பீட்டாங்க ! ( அழகான பொண்ண பெத்தாலே அத்தை முறைதானே ஆகணும் ?? ) ரயிலும் கெளம்பீடுச்சு !

இப்படி ஒரு அழகான பொண்ணு கூட இருக்கும்போது அப்படியே 10 நாளா சோத்தையே கண்ணில பார்க்காதவன் வடிச்சசோத்தை பார்க்கிற மாதிரி பொண்ணைப்பார்க்கக் கூடாதுங்க ! அப்படியே ரெண்டு ப்ளேட் மட்டன் பிரியணியை full கட்டு கட்டிமுடிச்சவன் வெள்ளை சோத்தை பார்க்கிற மாதிரி பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பார்க்கணும் ! நாம அந்து அவலாகி நொந்து நூலாகி காஞ்சு கருவாடா இருக்குறோம்கறது வெளிய தெரியக்கூடாதில்ல? அதுவும் நாம இதுல கில்லியாச்சே?? ஹிஹிஹி இனி திருச்சி வரைக்கும் நானும் என் ஏஞ்சலும் ( வெள்ளை கலர் சட்டையில்ல ? அதான் ஏஞ்சல் ) தான் ! திருச்சி வர்ற வரைக்கும் எந்தப்பயலும் இங்கன வரமாட்டான். அதுக்குள்ள சட்டியிலே மணலைக்கொட்டி பதமா கடலைய போட்டு வறுத்தர வேண்டியதுதான் ! முடிவே பண்ணீட்டேன்.

புத்தக கண்காட்சியிலே வாங்கின ஒரு புத்தகத்தை எடுத்து வச்சுகிட்டேன் ! முதல்ல நம்ம Personality ய load பண்ணனுமில்ல நம்ம ஏஞ்சல் மனசிலே ?? கண்ணு மட்டும்தான் புத்தகத்திலே! மனசு பூரா எப்படி ஆரம்பிக்கிறதுன்னு ஒரே சிந்தனைதான் போங்க. நமக்கு பஜாஜ் ஸ்கூட்டர் கணக்கா எப்பவுமே Starting Trouble தான் ! இந்த தடவை அப்படி ஏதும் ஆகக்கூடாதுடா பாண்டி. இப்பவே இஞ்சினை warmup பண்ணுடா அப்பதான் ஒரே ‘கிக்’ குல ஸ்டார்ட் ஆகும்ன்னு மனசுல பட்சி உடுக்கை அடிக்குது, அப்போதான் திடீர்னு ஒரு குயில் கூவுற மாதிரி கேட்டுச்சு. என்னடா இதுன்னு பார்த்தா என் சவுத் இண்டியன் டயானா தாங்கோ!! ஏதோ என்கிட்டே கேட்டு இருக்கும் போல !!

“ என்னாங்க என்ன கேட்டீங்க? “

“இல்ல நீங்க லேயர் பெர்த்தா ??”

அடங்கொக்கமகா மக்கா!!! பாட்டிக வந்தப்போ எல்லாம் நமக்கு லோயர் பெர்த் ஒதுக்கி இருந்தாங்களே! இப்போ நம்ம ஜிங்கிலிக்கு தேவைப்படுது போல இருக்கே ஆஹா லேயர் பெர்த்தை தானமா கொடுத்து ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி” மாதிரி “ டயானாவுக்கு லேயர் பெர்த் கொடுத்தான் பாண்டி !” னு நாளைக்கு வரலாறுல வர்றது ஜஸ்ட்ல மிஸ் ஆய்டுச்சு போல இருக்கேன்னு கவலையோட

“ இல்லீங்க எனக்கு அப்பர் பெர்த்தான்!! ஏன்?? “

“ இல்லை இல்லை நான் உக்கார்துகிட்டு இருக்கேன். இது உங்க பெர்த்தோன்னுதான் கேட்டே.ன் வேறே ஒன்னும் இல்லை !”

அய்யோ சிரிக்கிறாளே !! கமான் பாண்டி ! அப்படியே செகண்ட் கியரைப்போட்டுத் தூக்குடா நம்ம கடலை வண்டியன்னு மண்டைக்குள்ள மின்னல் !!

அப்படியே லேசா பிட்டைப்போட ஆரம்பிச்சேன். மெர்லின் ! எப்படீங்க அழகான பொண்ணுகளுக்குன்னு பேரு வக்கிறாங்க !! மெர்லின் அல்ல அவள் ஒரு மர்லின்மன்றோ !! சென்னையிலே மெர்லின் ஏதோ காலேஜிலே மாஸ்டர் டிகிரி படிக்குதுதாம். பாவம் கூடப்படிக்குற பயலுவ ! ம்ம்ம் அப்படியேக்கா கொஞ்சநேரம் போச்சு ! அப்போதாங்க நான் ஒரு கேள்வியக்கேட்டேன் ! “ ஆமாங்க மெர்லின் உங்க அம்மாவை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே !! என்ன பண்றாங்க? ரொம்ப Familiar் ரா இருக்கு அவ்ங்க முகம் எங்கயோ பார்த்திருக்கேன் ! “

“அப்படியா ? ஒருவேளை நீங்க அவங்ககிட்டே படிச்சி இருக்கலாம் ! எங்க அம்மாவும் அப்பாவும் ஒரு காலேஜ் வச்சு இருக்காங்க !! “

“ அட அப்படியா ? எப்படி மறந்தேன் ! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அவங்க முகம் ! என்ன காலேஜ் ? “

அஹா பாண்டி கமான் ஏதோ ஒரு சொந்தம் ஏதோ ஒரு பந்தம் உனக்கு நம்ம மெர்லினோட இருக்கும் போல இருக்கேடா. அப்படியே இதே ரூட்டிலே டாப் கியரைப்போட்டு துக்குடா மாப்ளே ! மனசு அப்படியே குஜால்ஸ் ஆய்டுச்சு ! பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டப்பத்தி பெருமையா சொன்னாலே போதுமே !! முக்காவாசி மேட்டர் ஓவர் !

“ ம்ம் இந்த 10வது பெயில் ஆனா கோச்சிங் கொடுப்பாங்களே டுடோரியல் காலேஜ் அதுதாங்க ! நீங்க ஒருவேளை அவங்க கிட்டே படிச்சு இருக்கலாம் !! “

நெக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டே என்னை பார்த்தா பாருங்க . ஒரு நிமிஷம் என்ன சொல்றதுன்னே தெரியலை !! அடிப்பாவி உன்னைய ‘பிக்’ கப் பண்ணுறதுக்கு நான் ஒரு ‘பிட்’டைப்போட்டா அது பூமராங்க கணக்கா இப்படிப்போட்டுத் தாக்கீடுச்சே. நம்மளை அவங்கம்மாகிட்டே படிச்ச டுடோரியல் கோஷ்டின்னு நெனச்சுட்டாளே !! அதுக்கப்புறம் எங்கே பேசுறது ?? இப்படியா ஆகணும் . "மெர்லின் நானெல்லாம் பத்தாவதிலே 2 மார்க்கிலே ஸ்கூல் First ஐ இழந்தவன் ! +2 விலே ஜஸ்ட் 200 மார்க்கிலே ஸ்டேட் first ஐ இழந்தவன் ன்னு சொல்லுடா!! "ன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது பாவம் அதுக்கு தெரியுமா ? அவ அதுக்கப்புறம் ஜன்னலை பார்த்து திருப்புன மூஞ்சியை என் பக்கம் திருப்பவே இல்லைன்னு !!