Tuesday, July 31, 2007

காதல் காவடி
நம்ம பய ஒருத்தன் கொஞ்ச நாளா சரியே இல்லங்க. நல்லா கல கலன்னு சிரிச்சுகிட்டே ஜோக் அடிச்சுகிட்டு பாக்குறவுகளையெல்லாம் கதறக் கதற ஓட்டிகிட்டு சும்மாகோயில் காளை கணக்கா துள்ளிகிட்டு சுத்திகிட்டு இருந்த பய இப்போ எல்லாம் ஏதோ மசக்கை வந்த பொண்ணு கணக்கா மூலையிலே போய் ஒக்கார்ந்துகிட்டு முகம் கொடுத்து பேசாம எங்கினயாச்சும் மூலையிலே போய் பதுங்கிகிட்டு மோட்டுவளைய பார்த்துகிட்டு இருக்குறான். ‘அட பாவி பயபுள்ள என்ன ஆச்சுடா உனக்கு?’ ன்னு ஒருநாளு பயலுக்கு வேப்பிலை அடிச்சு கேட்டப்போ பய மொகத்துல அப்படி ஒரு வெக்கம் !! டேய் நான் கூட சொல்லிகிட்டு இருப்பேன்ல என் ஆபீஸ்ல ரெண்டு பொண்ணுங்க ப்ராஜெக்ட் பண்ணுதுங்கன்னு?? அதுல ஒரு பொண்ணுமேல எனக்கு ... என்னான்னு சொல்லத் தெரியலை ஆனா ஒரு மாதிரி பீலிங் ! ‘ ன்னு சொல்ல சொல்லவே அப்படியே ட்ரீம் அடிக்கிறான்.அடப்பாவிப்பயபுள்ள ! அதுதானா இது ?!! ன்னு நெனச்சுகிட்டு ‘டேய் என்ன இப்படி லேசா சூடம் காட்டிட்டு போய்ட்டா என்ன அர்த்தம் ? கொஞ்சம் வெளக்கமா சொல்லு ராசான்னு! ‘ பயலுக்கு லேசா விபூதியடிசு வுட்டு கேட்டேன். இந்தமாதிரி மேட்டரெல்லாம் தான் நமக்கு அல்வா சாப்புடற மாதிரி ஆச்சே !! ‘ டேய் பாண்டி அந்த பொண்ணுக என் கம்பெனியிலே ப்ராஜெக்ட் பண்ண வந்துதுங்க அதுகளுக்கு நானும் இன்னொரு பையனும்தான் ‘கைட்’ பண்ணறோம். ரெண்டுமே என்கிட்ட நல்லாதான் பேசுது. நான் எதைய சொன்னாலும் பெரிய ஜோக் கேட்ட கணக்கா வுழுந்து வுழுந்து சிரிக்குதுக. அப்படி சிரிக்குறப்போ அவ ஒரு பார்வை பார்ப்பா பாரு அதையப்பபார்த்து நான் வுழுந்துடேண்டா!! “ பயலுக்கு சும்மா காதல் பீலிங் ரெண்டு காலுலையும் சலங்கையக் கட்டிகிட்டு கன்னாபின்னான்னு ஆடுறது கண்ணுல தெரியுது !‘சரி சரி அதான் ரெண்டு பேர் அதுகளுக்கு சொல்லிகொடுக்கறீங்களே உன்னையதான் பார்க்குதுன்னு எப்படிடா சொல்லுறே?’ ன்னு கேட்டதுக்கு ‘அட மாப்ளே அவன் சரியான சொம்புடா! வாயே தொறக்க மாட்டான் என்னமோ இவந்தான் பில்கேட்ஸுக்கே கோடிங் குரு மாதிரி எப்பபாரு கோடிங் தான்.எப்ப அதுககிட்ட பேசுனாலும் சப்ஜெக்ட்டு மட்டும் தான். அவனை வுடுடா. என்னைய மாதிரியே அவளுக்கு இப்படி பீலிங்ஸ் வந்து இருக்கான்னு எப்படியாச்சும் கண்டுபிடிக்கிறேன்!’ ன்னு பய கட்டபொம்மு கணக்கா டயலாக் வுட்டுட்டு கெளம்பிட்டான் !

பய அதுக்கபுறம் பாக்கணுமே! டெய்லி ஆபீஸுக்கு பேஷன் பேரேட் தான்! வாயிலே விசில்தான்! பய கால் தரையிலயே படரது இல்லை ! ‘ஏண்டா இந்த ஞாயித்துக்கெழமை லஞ்சுக்கு ஏதாச்சும் பஃபே போலாமா?’ ன்னு கேட்டா ‘ சாரி மாப்ளே என் ப்ராஜெக்ட் மேட்ஸோட லஞ்சுக்கு அப்பாய்ண்மெண்ட் பிக்ஸ் ஆய்டுச்சு கோச்சுகாதடா! ன்னு சொல்லிட்டு பிளிறிகிட்டு ஓடுறான் ! அடப்பாவி இப்படி ஒருத்திக்காக இருக்கறவனுகளை எல்லாம் அத்துவுட்டுட்டு போறியேடான்னு நெனச்சாலும் சரி நம்ம பய எஞ்ஜாய் பண்ணட்டும் மனசு என்னவோ வாழ்த்திகிட்டு தான் இருந்துச்சு. ஒரு பயலோட மனசு இன்னோரு பயலுக்குதானே தெரியும் ?? !!!

இப்படியே பயலோட வண்டி டாப் கியர்ல ஒரு ரெண்டு மாசத்துக்கு ஓடிகிட்டு இருந்துச்சு. ஒரு ரெண்டு நாளா பயகிட்டே இருந்து மூச்சு பேச்சையே காணோம். ‘என்னடா கண்ணா சும்மா கொம்பு சீவுன சிம்பு கணக்கா வர்றவன் போறவனையெல்லாம் சும்மா பிரிச்சு மேய்ஞ்சுகிட்டு இருந்தே? இப்போ என்னடான்ன டி ராஜேந்தர் கணக்கா தாடியோட சீன் போடுறே என்ன விசயம் ? ன்னு கேட்டதுதான் பய கண்ணுல இருந்து சும்மா குத்தால அருவி கணக்கா லிட்டர் லிட்டரா கண்ணீர் !!! அட பாவி என்னடா ஆச்சும் சொல்லித்தொலைன்னு கேட்டா ‘ மாப்ளே நாளு நாளைக்கு முன்னால அவகிட்டே என் மனசை தொறந்துட்டேண்டா ! அவ முடியாதுன்னு சொல்லி இருந்தாகூட பரவாயில்லை! ஆனா அவ அந்த கோடிங் கோயானை விரும்பரதா சொல்லீட்டாடா என்னால தாங்க முடியலைடா ! பய பாரேன் எப்பவுமே ஏதோ கோடிங் எழுதர மாதிரியே ‘சீனை’போட்டுகிட்டு இருந்துட்டு ‘கேப்’புல கெடா வெட்டீட்டாண்டா ! ஏண்டி எங்கூட தானே சிரிச்சு சிரிச்சு பேசுனே அவன்ந்தான் சரியான உம்மணாமூஞ்சின்னு சொல்லுவியேடின்னு கேட்டா அவர் அப்படி இல்லைடான்னு எவ்ளோ funny தெரியுமா ? ன்னு சொல்லறாடா !! பாருடா அந்த நாயி ‘அவர்’ ஆய்ட்டாரு. அந்தப் பன்னி என்ன fun பண்ணிக் கவுத்தானோ ? இதைய கூட தாங்கிடேண்டா! ஆனா கடைசியா சொல்லறா 'டேய் உன்னைய பார்த்தா செத்துப்போன என் அண்ணன் மாதிரியே இருக்கே'ன்னு சொன்னா பாரு! அதுக்கு மேல என்ன பண்றதுன்னே தெரியலைடா !!! “

நீங்க சொல்லற மொக்கை ஜோக்குக்கெல்லாம் சும்மா கெக்கேபிக்கேன்னு இந்த பொண்ணுங்க சிரிக்குதுன்னு அதுக பின்னாடி காதல் காவடி எடுத்துகிட்டு போய்டாதீங்க மக்களே!! உங்கள ஒரு வடிவேலு அண்ணன் மாதிரியோ இல்லை விவேக் தம்பி மாதிரியோ நெனச்சு இருக்கலாம் யாரு கண்டா ? அப்படியே எப்ப பாரு மானிடரையே மொறைச்சு மொறைச்சு பார்த்துகிட்டு ‘பப்பரக்கா’னு பேக்கு மாதிரி சீன் போட்டுகிட்டு பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக ! பார்த்து சூதானமா ‘லவ்’வுங்கப்பூ !!

Monday, July 23, 2007

தமிழ்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணுண்ணா...
நம்ம சூப்பர் ஸ்டார் சொன்னாலும் சொன்னாரு நம்ம மண்டைக்குள்ள சும்மா டின் டின் டின்னு மணியடிக்குது. அதென்னாங்க தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொண்ணுண்ணா எப்படி இருப்பாங்கன்னு !! ஆஹா நாமளும் தமிழ் நாட்டுலதானே இருக்கோம் நம்ம கலாச்சார சாகுபடி என்னான்னு தெரிஞ்சுக்கலேன்னா நீயெல்லாம் வேஸ்டுடா பாண்டின்னு நம்ம சிந்தனை சுனாமியா சுழட்டி சுழட்டி அடிச்சதிலே ஆனது ஆவட்டும்னு வழக்கம் போல தமிழ் கலாசாரதோட வேட்டி கட்டிகிட்டு கலாசார வேட்டைக்கு கெளம்பலாம்னு நெனச்சா அது ( வேட்டிதாங்க ) எந்நேரமும் அவிழகூடிய அபாயம் இருப்பதால் ( முன்ன பின்ன கட்டி இருந்தா தானே ?!) சரி சரி போனா போவட்டும்னு ஜீன்ஸும் கதர் சட்டையும் போட்டுகிட்டு ஆராய்ச்சிக்கு கெளம்பிட்டான்யா பாண்டி !!!


அட ஒரிஜினல் தமிழ் காலாச்சாரம் என்னாங்க?? நாமளும் சூப்பர் ஸ்டார் மாதிரி ஏதாச்சும் கோயிலுகு போய் தாவணி போட்ட தீபாவளி ஏதாச்சும் தென்படுதான்னு பார்த்தா என்ன சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்? மருந்துக்கு கூட ஒரு தாவணிய காணோம். ஆஹா என்னடா இது தாவணிதான் தமிழ் கலாசாரம்ன்னு நம்ம சூப்பர் ஸ்டார் படத்துல காட்டுனாவுளே என்ன இது? ஆராச்சும் ஒருத்தராவது கடை பிடிக்கறாங்களா? இல்லையே !!!


சரி போனா போவுது தமிழ் கலாசாரம் நல்ல தமிழாவது பேசுதான்னு பார்த்த ‘ ஸ்வாமி கேன் ஐ ஹாவ் சம் விபூதி ப்ளீஸ் ! ’ ன்னு சும்மா இங்கிலிபீஸ்ல டயானா தங்கச்சி கணக்கா பீட்டர் உட்டுட்டு பயபக்தியோட கூட நிக்குற தமிழ் பயலுவகள எல்லாம் எளக்கார ‘லுக்’ உட்டுகிட்டு இருக்குறாக !

சரி தமிழ் கலாச்சாரத்தோட நம்ம பயளுவ வேட்டிய கட்டிகிட்டு பக்தியோட சாமி கும்பிட கோயிலுக்கு வந்தா ஆரச்சும் ஒரு பொண்ணாவது பாகுறாவுலான்னு பார்த்தா அட அதுவும் இல்லையே. சரி பாக்காட்டி போவுது போனா போறானுக நாமதான் தமிழ் கலாசார ‘சிம்பள்’ ளான தாவணிய மறந்துட்டோம் இவனுகளாவது ஞாபகம் வச்சு வேட்டியோட வர்றானுவளேன்னு ஒரு மரியாதையோட பார்க்க வேணாம்? ‘அட இங்க பாருடி மல்லு வேட்டி மைனர் ! ‘ னு நக்கல்வுட்டு கலாய்க்குதுங்க !

நம்ம ஆளுக்கு நெம்பத்தான் ஆசைங்க. பொண்ணு ‘கலரா’ வும் இருக்கோணும் ‘கல்ச்சர்’ரோடவும் இருக்கோணுமாம்.என்ன கொடுமை சார் இது? ஆமா அப்போ நல்ல செவப்பா கலரா இருக்குற பொண்ணுகதான் தமிழ் கலாசாரத்தை தொட்டில்ல போட்டு தாலாட்டராவுளான்னு பார்த்தா அட அதுவும் இல்லீங்க துப்பட்டாவையே ‘பின்லேடி’ (பின்லேடனோட பெண்பாலுங்கோ ! ) கணக்கா மூஞ்சியில சுத்திகிட்டு பைக் பின்னாடி தெறந்த மனசோட உக்கார்துகிட்டு பாக்குறவுக ‘பைக்’குகளை எல்லாம் தொட்டில் கணக்கா தள்ளாட வைக்கிறாங்க !!

என்ன பண்ணியும் தமிழ்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு எப்படி இருக்கும்னு கண்டே புடிக்க முடியலைங்க ! ஆராச்சும் பெரிய மனசு பண்ணு தமிழ் கலாசாரத்தை பத்தி ஒரு லெக்சர் கொடுத்துடு போங்களேன் ப்ளீஸ் !!!